Wednesday, January 22, 2020

பள்ளிக்கூடமா? பதற்ற கூடமா?


பள்ளிக்கூடமா?  பதற்ற கூடமா?



பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் கோழிப்பண்ணைகள் போன்று மாணவர்களை, குறிப்பாக பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது மாணவர்களை இயந்திரத்தனமாக படிக்க வைப்பது, திணிப்பது போன்று செயல்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் அந்த வருடங்களை பெரும் சுமையாகவே கருதி, தான் படிப்பதற்கு லாயக்கற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நூறு சதவீத தேர்ச்சிக்காக பள்ளிக்கூடங்களும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலனில் அக்கறை செலுத்தாது அவர்களை வெறும் மதிப்பெண் பெறவைப்பதிலேயே கருத்தாக செயல்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களின் பின்புலம், குடும்ப சூழல், பெற்றோர்களின் படிப்பு, வசதி, மாணவரின் அறிவுத்திறன், படிப்பதில் உள்ள ஆர்வம் போன்றவற்றை கருத்தில் கொள்வதில்லை.
பெற்றோர்களும் தன்பிள்ளை எப்படியாவது உயர்ந்தால் போதும் என்று கருதி கடன் பட்டேனும் அவர்களை இந்தமாதிரி பள்ளிக்கூடங்களில் சேர்த்து விடுகின்றனர். சில மாணவர்கள் காலை ஏழு மணிக்கே பள்ளிக்கூடத்தில் இருப்பது, இரவு ஏழு மணிக்குப் பிறகு பள்ளிக்கூடத்தில் இருந்து வெளிவருவது என்று வெயிலைக் கூட பார்க்காமலே படித்து வருகிறார்கள். இவ்வாறு வளர்இளம் பருவத்தில் பெரும்பாலான நேரத்தை ஒரு அடைக்கப்பட்ட வகுப்பறைக்குள்ளேயே செலவிடுவதால் உடல்நலம் குன்றுவதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் அவர்கள் மனதளவில் முதிர்ச்சி அடைவதும் பாதிப்படைகிறது. மேலும் பெற்றோர்களும் மதிப்பெண் மட்டுமே படிப்பின் அளவுகோலாக கருதுவதாலும் அவர்களை படி படி என்று அழுத்தம் கொடுப்பதாலும், ஒரு பரிட்சையில் சில மதிப்பெண்கள் குறைந்தால் கூட குறை கூறுவதாலும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி மன பதற்றம் அடைகின்றனர். படிப்பில் கவனக் குறைவு, படிப்பில் ஆர்வமின்மை, படிப்பதை ஒரு மலைபோல் கருதுவது படிப்பதற்கு, தான் தகுதி இல்லை என நினைப்பது பரிட்சை ஒரு முடிக்க முடியாத காரியமாய் கருதுவது இவையெல்லாம் அவர்களைத் தொடர் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி மனநலப் பிரச்சினைகள் உருவாக வழிகோலுகின்றன. எப்போதும் சோர்ந்து இருப்பது, பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் ஏதேனும் உடல் உபாதைகளை சொல்லுவது, பள்ளிக்கூடம் செல்வதை தவிர்ப்பது, அனைவரிடமும் கோபப்படுவது, எதிர்மறையாக செயல்படுவது போன்றவை மன அழுத்தத்தால் ஏற்படுகின்றது.
பெற்றோர் ஆசிரியர் மட்டுமல்லாது கல்வியலாளர்கள், அரசு, சமூகம் இவற்றின் சிந்தை களிலெல்லாம் கல்வியைப் பற்றிய கண்ணோட்டம் மட்டுமல்லாது மதிப்பெண் பற்றிய எண்ணங்களும் மாறி, கல்வி என்பது ஒரு மனிதனை சிந்திக்கவும் எதிர்காலத்தில் நேர்மறை மனநிலையோடு எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு ஒரு மாணவனை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாகவே பயன்படவேண்டும் என்ற புரிதல் வரவேண்டும். மதிப்பெண் கூட்டும் கல்வியை விட மதிப்புக்கூட்டல் கல்வியே ஒரு மனிதனை உயரத்திற்கு எடுத்துச்செல்லும்.

மாணவர்களிடையே ஏற்படும் பதற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
·         முதலில் மாணவர்கள் தூங்குகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வளர்இளம் பருவத்தில் பொதுவாகவே மாணவர்கள் சோம்பேறித்தனம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறைந்தது 7 முதல் 8 மணி நேரங்கள் தூங்கினால் மட்டுமே பகல் பொழுதில் அவர்களால் சிறப்பாக செயல்படவும் கவனத்தோடு படிக்கவும் முடியும்.
·         இரவு தூக்கமே நாம் படித்தது எல்லாம் நினைவில் கொள்வதற்கு அடிப்படையானது. பகல் முழுவதும் படித்தாலும் இரவில் மட்டுமே அவை மூளையில் பதிவு செய்யப்பட்டு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்
·         மாணவர்கள் சரியான முறையில் உணவு உட்கொள்கிறார்களா என்பதை கவனியுங்கள். அவசர அவசரமாக காலை உணவின்றி பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் பொழுது அவர்களால் தொடர் கவனம் செலுத்த முடியாது. எனவே பாடங்களை கவனிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் குறைகள் ஏற்படும்
·         பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிருங்கள். மதிப்பெண் மட்டுமே அவர்கள் எதிர்காலத்திற்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படித்தான் படித்தீர்களா? இல்லை என்றால் நீங்கள் இப்போது எப்படி உள்ளீர்கள் நீங்கள் உங்களை ஒரு வெற்றியாளர் என்பீர்களா? அல்லது தோல்வியாளர் என்பீர்களா? உங்களோடு படித்த சக நண்பர்களின் வாழ்வை பாருங்கள். அவர்களை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? அவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அந்த மதிப்பெண்கள் அவர்களுக்கு இன்று உதவுகிறதா? வெறும் பொருளாதார உயர்வு மட்டுமே வாழ்வின் உயர்வு அல்ல. பெரும் பொருளாதார வசதி கொண்டவர்களும் மனநல நன்றி அவதியுறுவதை நினைவில் கொள்ளுங்கள்.
·         குழந்தைகள் தங்களுக்கு பிடித்த காரியங்களில் நேரம் செலவிடுகிறார்கள் என்பதை உறுதி செய்யுங்கள். 24 மணி நேரமும் படிப்பு என்று மட்டுமே இல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான செயல்கள், மனதிற்கு சந்தோஷம் தரும் செயல்கள், உடற்பயிற்சி, நண்பர்களோடு நேரம் செலவிடுவது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட அனுமதியுங்கள் வாழ்வில்.
·         வெற்றியாளர்கள் சிறந்த உறவுகளை பேணுபவர்களாக இருக்கிறார்கள். சுற்றியுள்ளவர்களுடன் உறவுகளை பேணுபவர்களாக இருக்கவேண்டுமென்றால் அவர்களோடு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டால் மட்டுமே முடியும்.
·         ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது படிப்பு மட்டுமே உயர்ந்தது மற்றவை தாழ்ந்தது என்ற எண்ணத்தோடு, மாணவர்களையும் அதை நோக்கியே பயணிக்க வைப்பதால் அந்த படிப்பு கிடைக்காத பொழுது அவர்கள் தங்களை நொந்து கொள்கிறார்கள். தங்களது வாழ்வு ஏதோ முடிந்தது போல தற்கொலையை நோக்கி செல்கிறார்கள்.
·         மாணவர்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து படிக்க வையுங்கள். வாழ்வின் ஆரம்பத்தில் எல்லோருமே தோல்விகளை  சந்திப்பார்கள். தோல்விகள் என்பது வெற்றியின் படிநிலை. ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான பாடத்தை படித்து, முடிவில் எல்லோரும் வெற்றியை நோக்கியே செல்கிறார்கள்.
·         வாழ்வில் வெற்றி என்பது கருப்பு வெள்ளை போல இரண்டல்ல. இடைப்பட்ட நிறமாக இருக்கலாம். மேடுபள்ளம், உயர்வு தாழ்வு, கஷ்டம் நஷ்டம் இவை அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அறிவதுடன், அவை இரண்டையும் ஒவ்வொன்றாக பாதித்து நேர்மறை மனநிலையுடன் மனநிறைவுடன் வாழ்வதே வாழ்க்கை என்பதையும் தெரிந்துகொள்ள வையுங்கள்.
·         ஆசிரியர்கள் மாணவர்களின் பின்புலம் பற்றி அறிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் கற்றுக் கொடுப்பதும் அவர்களை ஊக்குவிப்பதும் அவர்களது வெற்றிக்கு வழி காட்டும்.

·         கல்வி கசப்பானதோ கஷ்டமானதோ கரை காண முடியாததோ அல்ல என்பதை மாணவர்களுக்கு புரிய வையுங்கள். ஒரு ஆசிரியரின் பணி மாணவனை மேலும் கற்க ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே அன்றி அவனை பதற்றமடைய செய்வதாய் இருக்கக்கூடாது.
நினைவில் கொள்ளுங்கள்! வாழ்க்கை ஒரு பயணம்! அதில் பதற்றத்தோடு பயணிப்பதும் நம்பிக்கையோடு பயணிப்பதும் அம்மாணவன் மட்டுமல்ல பெற்றோர் ஆசிரியர் சமுதாயம் ஆகியவற்றின் பொறுப்பும் கூட!

No comments:

Post a Comment